DFCC வங்கி, பெண்களை இலக்காகக் கொண்ட தனது வங்கிச்சேவை முன்மொழிவான DFCC ஆலோக்கா மூலமாக, யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற Green Wheels Carnival நிகழ்விற்காக Evolution Auto உடன் கைகோர்த்துள்ளது. நலிவுற்ற சமூகங்களைச் சார்ந்த பெண்கள் தமது வீட்டு வருமானத்தை வலுப்படுத்தி, சொந்தக்காலில் நின்று, மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்காக, அபிலாஷைமிக்க பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய வாய்ப்புக்களை இம்முயற்சி தோற்றுவித்துள்ளது.
Mahindra Last Mile Mobility மற்றும் Evolution Auto ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட Mahindra Treo Pink Edition வாகனத்தின் அறிமுகமே இம்முயற்சியின் நடுநாயகமாக அமைந்ததுடன், வட மாகாணத்திலுள்ள பெண்களுக்கு பிரயாணிகள் போக்குவரத்தில் நிலைபேற்றியல் கொண்ட ஜீவனோபாயத்திற்கான வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கும் வகையிலான நிதி வசதிகள் மற்றும் சூழல்நேய போக்குவரத்து தீர்வு ஆகியவற்றை ஒன்றிணைப்பதனூடாக, சமூக வலுவூட்டல் மற்றும் சூழல் மீதான பொறுப்புணர்வு ஆகிய இரண்டையும் நோக்கிய முக்கியமொனதொரு படியை இந்நிகழ்வு பிரதிநிதித்துவம் செய்கின்றது.
இரு தினங்களாக இடம்பெற்ற Green Wheels Carnival நிகழ்வு, நிலைபேற்றியல் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை ஆராயும் அதேசமயம், தொழில்முயற்சியாண்மை வளர்ச்சிக்கு இடமளிப்பதில் நிதி வசதி வாய்ப்புக்களுக்கான முக்கியத்துவத்தையும் அங்குள்ள சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்கு சிறந்ததொரு மேடையை வழங்கியுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் நேரடியாக தொடர்புபடுவதற்கு DFCC ஆலோக்கா இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தியுள்ளதுடன், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட நிதித் தீர்வுகள், ஆலோசனை சேவைகள், மற்றும் விழிப்புணர்வைக் கட்டியெழுப்பும் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்கள் அவர்களுடைய தொழிற்பயணங்களுக்கு உதவுகின்ற, நடைமுறைக்கு ஏற்ற நிதிக் கருவிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை உறுதி செய்து, குத்தகை, நிலையான வைப்புக்கள், தனிநபர் கடன்கள், மற்றும் அடகுசேவை உள்ளிட்ட பரந்த வகைப்பட்ட வங்கிச்சேவைகள் குறித்தும் வங்கி அவர்கள் மத்தியில் காண்பித்துள்ளது.

DFCC வங்கியின் உப தலைவரும், Pinnacle மற்றும் ஆலோக்கா வங்கிச் சேவைகளுக்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் அவர்கள் கூறுகையில்:
“பெண்கள் செழித்து வளர்வதற்கான மேடையே DFCC ஆலோக்கா என்பதுடன், நிலைபேறான மற்றும் கௌரவமான வழியில், அபிலாஷைமிக்க பெண் தொழில் முயற்சியாளர்களின் ஜீவனோபாயங்களைக் கட்டியெழுப்புவதற்கு கூட்டாண்மைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதற்கு வெளிப்படையான ஒரு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு அமைந்துள்ளது. அவர்கள் தமக்காக மாத்திரமன்றி, தமது குடும்பங்கள் மற்றும் தமது சமூகங்கள் ஆகியோருக்கும் வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதற்கு அவர்களுக்கு உறுதுணை நிற்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.”
DFCC ஆலோக்கா மற்றும் Evolution Auto ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டாண்மை, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் அதேசமயம், நிலைபேறான போக்குவரத்து மற்றும் சமூக மேம்பாட்டை வளர்த்து, அனைவருக்கும் சம வாய்ப்புக்களை அளிக்கும் வளர்ச்சியை முன்னேற்றும் வங்கியின் இலக்கினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நிதியியல் வலுவூட்டல் மற்றும் சூழல்நேய புத்தாக்கம் ஆகியவற்றுக்கு இடையில் பாலம் அமைப்பதன் மூலமாக, இலங்கை எங்கிலும் நீடித்து நிலைக்கும் நற்பேறைத் தோற்றுவிப்பதில் தர ஒப்பீட்டு நியமங்களை DFCC ஆலோக்கா தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.
DFCC வங்கி குறித்த விபரங்கள்
1955ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது.
நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
