- வருமான வரிக்கு முன்னரான இலாபம் – ரூ. 12,809 மில்லியன் 20.75% ஆல் அதிகரிப்பு
- வரிக்குப் பின்னரான இலாபம் – ரூ. 8,327 மில்லியன் 26.30% ஆல் அதிகரிப்பு
- உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 15.08%
- மொத்த மூலதன போதுமான விகிதம் 18.34%
- மதிப்பிறக்க கட்டணங்கள் (நிலை 3) விகிதம் 1.48%
செலான் வங்கி 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ. 12,809 மில்லியனை பதிவு செய்தது. இது 2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 10,608 மில்லியனிலிருந்து 20.75% வளர்ச்சியைக் காட்டுகிறது.
2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாதங்களில், செலான் வங்கி வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ. 8,327 மில்லியனை பதிவு செய்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ. 6,593 மில்லியனுடன் ஒப்பிடும்போது 26.30% வளர்ச்சியாகும்.
நிதி செயல்திறன் அறிக்கை
2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாதங்களில் நிகர வட்டி வருமானம் ரூ. 27,262 மில்லியனில் இருந்து ரூ. 27,057 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது முன்னைய ஆண்டை விட 0.75% குறைவாகும். இது சந்தை வட்டி வீதங்களில் ஏற்பட்ட குறைப்பு மற்றும் கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகளை மறுமதிப்பீடு செய்ததன் காரணமாக ஏற்பட்டது. வங்கியின் நிகர வட்டி மிகை (NIM) 2024இல் 4.90% இலிருந்து 2025இன் மூன்றாவது காலாண்டில் 4.48% ஆகக் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் நிகர கட்டண அடிப்படையிலான வருமானம் ரூ. 5,829 மில்லியனில் இருந்து ரூ. 6,761 மில்லியனாக 15.99% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக அட்டைகள், பணம் அனுப்புதல், வர்த்தகம் மற்றும் பிற நிதிச் சேவைகளிலிருந்து வரும் கட்டண வருமானம் என்பவை காரணிகளாக அமைந்தது.
2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 35,146 மில்லியனாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 34,264 மில்லியனுடன் ஒப்பிடும்போது 2.57% அதிகமாகும். இவ் அதிகரிப்பிற்கு இந்த காலகட்டத்தில் நிகர கட்டணம், தரகு வருமானம் மற்றும் பிற தொழிற்பாட்டு வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகும்.
2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாதங்களில் மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் 2024இல் பதிவாகிய ரூ.15,674 மில்லியனில் இருந்து 2025இல் ரூ.17,144 மில்லியனாக 9.38% அதிகரித்துப் பதிவாகியுள்ளன. பணியாளர்கள் தொடர்பான செலவுகள் அதிகரித்ததன் காரணமாக ஆளணிச் செலவுகள் 8.21%ஆல் அதிகரித்து ரூ. 8,085 மில்லியனில் இருந்து ரூ.8,749 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக ஏனைய தொழிற்பாட்டுச் செலவுகள் மற்றும் பெறுமானத் தேய்வு மற்றும் பெறுமானக் குறைப்புச் செலவீனங்களும் 10.64%ஆல் அதிகரித்துள்ளன. பல்வேறு செலவு கட்டுப்பாட்டு முயற்சிகள் மூலம் செலவுகளை குறைக்க வங்கி தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவான ரூ. 4,150 மில்லியனுடன் ஒப்பிடும்போது 81.39% குறைவுடன் 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கி ரூ. 772 மில்லியன் மதிப்பிறக்க கட்டணமாக பதிவு செய்துள்ளது. நிதிநிலை அறிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளின் போதுமான தன்மையை உறுதி செய்வதற்காக உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் கடன் ஆபத்து விவரக்குறிப்பு மற்றும் வங்கியின் கடன் பிரிவின் கடன் தரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் மதிப்பிறக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதை வங்கி உறுதி செய்துள்ளது. வங்கியின் சொத்துக்களின் தர விகித மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் 1.48% (2024 – 2.10%) ஆக இருந்த அதே நேரத்தில் நிலை 3 வழங்கல் காப்பு விகிதம் 30/09/2025 நிலவரப்படி 83.22% ஆக வலுவானதாக இருந்தது. இது வங்கித் துறையில் மிக உயர்வான பதிவுகளில் ஒன்றாகும்.
வருமான வரிச் செலவுகள் ரூ. 4,482 மில்லியனாகப் பதிவாகியுள்ளன. இது ஒப்பீட்டுக் காலத்தில் ரூ. 4,015 மில்லியனாக இருந்ததுடன் 11.64% அதிகரிப்பாகும். நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி 2025இன் முதல் ஒன்பது மாதங்களுக்கு ரூ. 3,365 மில்லியனில் இருந்து ரூ. 3,881 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருட இதே காலகட்டத்தை விட 15.33% அதிகமாகும். 2025ஆம் ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களுக்கு சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி ரூ. 467 மில்லியனில் இருந்து ரூ. 539 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது தொடர்புடைய காலகட்டத்தை விட 15.33% அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக, 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கி ரூ. 8,327 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தை (PAT) பதிவு செய்துள்ளது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 26.30% வளர்ச்சியாகும்.
நிதி நிலைமைக் கூற்று
கடந்த ஒன்பது மாதங்களில் நிலையான வளர்ச்சியைக் காட்டும் வகையில் 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 780 பில்லியனில் இருந்து ரூ. 853 பில்லியனாக அதிகரித்தது. வங்கி தனது தற்போதைய வாடிக்கையாளர் தளத்தை தக்க வைத்துக் கொண்டு புதிய வங்கிக் கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 534 பில்லியனாகவும் நிகர வளர்ச்சி ரூ. 71 பில்லியனாகவும் வைப்புத்தொகைகள் ரூ. 675 பில்லியனாகவும் நிகர வளர்ச்சி ரூ. 28 பில்லியனாகவும் பதிவாகியுள்ளன. வங்கியின் CASA விகிதம் 29%இல் பராமரிக்கப்பட்டது.
முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள்
செலான் வங்கி பிஎல்சியின் முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள் 2025 செப்டெம்பர் 30 நிலவரப்படி நல்ல நிலையில் இருந்தன. மூலதன போதுமான விகிதங்கள் ஒழுங்குமுறை குறைந்தபட்ச தேவைகளை விட மிக அதிகமாக இருந்ததுடன் பொது உரிமையாண்மை படி 1 மூலதன விகிதம் மற்றும் மொத்த படி 1 மூலதன விகிதம் 12.24% ஆகவும் மொத்த மூலதன விகிதம் 18.34% ஆகவும் பதிவு செய்யப்பட்டன.
வங்கி சட்டரீதியான தேவையை விட அதிகமாக திரவத்தன்மை காப்பு விகிதத்தை (LCR) பராமரித்தது. அனைத்து நாணய LCR விகிதமும் ரூபாய் LCR விகிதமும் முறையே 317.20% மற்றும் 276.57% ஆக பராமரிக்கப்பட்டன.
வங்கியின் சொத்துக்களின் தர விகித மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் மற்றும் மதிப்பிறக்க (நிலை 3) வழங்கல் காப்பு விகிதம் ஆகியன முறையே 1.48% (2024 – 2.10%) மற்றும் 83.22% (2024 – 80.90%) ஆக இருந்தன.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 15.08% (2024 – 15.35%) ஆகவும் சராசரி சொத்துக்களின் மீதான வருவாய் (வரிக்கு முன்னரான இலாபம்) 2.12% (2024 – 2.14%) ஆகவும் இருந்தன.
2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் பங்கு ஒன்றின் இலாபம் ரூ. 13.10 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 10.37 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. செப்டெம்பர் 30, 2025 அன்று வங்கியின் ஒரு பங்கிற்கான நிகர சொத்து பெறுமதி ரூ. 122.99 ஆக இருந்தது (குழு ரூ. 126.33).
2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வங்கி 20 “செலான் பகசர நூலகங்களை” திறந்து மொத்த நூலகங்களின் எண்ணிக்கையை 285 ஆக உயர்த்தியது. இது நாடு முழுவதும் சிறுவர்களின் கல்வியை வளர்ப்பதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்குமான வங்கியின் உறுதிப்பாட்டை தெளிவாகக் குறிக்கிறது.
ஜூலை 9, 2025 அன்று, வங்கி ரூ. 15 பில்லியன் மதிப்புள்ள Basel III இணக்கமான, அடுக்கு 2, பட்டியலிடப்பட்ட, தரப்படுத்தப்பட்ட, பிணையற்ற, கீழ்நிலைப்படுத்தப்பட்ட, மீட்கத்தக்க 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் தொகுத்திக்கடன்களை வெற்றிகரமாக திரட்டியது. அவை தொடக்க நாளிலேயே அதிகளவு திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Fitch மதிப்பீடுகள் செலான் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிலையான கண்ணோட்டத்துடன் இரண்டு புள்ளிகளால் 2025இல் உயர்த்தி ‘A+(lka)’ ஆக மேம்படுத்தியுள்ளன.
