Home » இலங்கையில் சட்ட அறிவை ஊக்குவிக்கும் ‘Know Your Neethi’ பிரசாரம் ஆரம்பம்

இலங்கையில் சட்ட அறிவை ஊக்குவிக்கும் ‘Know Your Neethi’ பிரசாரம் ஆரம்பம்

by Ceylon Business
June 19, 2025 5:01 pm/**/ 0 comment

நீதிக்கான ஆதரவு திட்டம் (JURE) சட்ட விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்குடன்
‘உங்கள் சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்’ பிரசாரத்தினை நடைமுறைப்படுத்துகின்றது

‘Know Your Neethi’ எனும் (உங்கள் சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்) புதிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரசாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய தலைமைத்துவத்தையும், சர்வதேச கூட்டாளர்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து இலங்கையர்களும் சட்ட அறிவை எளிமையாக பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வில் நீதியமைச்சர் கௌரவ ஹர்ஷண நாணயக்கார, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மேன்மை தங்கிய கார்மென் மொரேனோ (Carmen Moreno), .நா. அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அஸூசா குபோட்டா (Azusa Kubota) மற்றும் இத்துறையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கூட்டாளர் அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இலங்கை மக்கள் நாளாந்த முகம் கொடுக்கும் முக்கியமான சட்டப் பிரச்சினைகளை, குறிப்பாக ஊழல், குடும்ப வன்முறை, தொழில் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, கணனி குற்றங்கள், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை உள்ளூர் மொழிகளில் விளக்கி, சட்டத்தை உரிய அறிவுடன் புரிந்துகொள்வதை இந்த பிரசாரம் ஊக்குவிக்கிறது.

banner

2022ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் படி, உரிய சட்ட அறிவின்மை காரணமாக 65% ஆனோர் குற்றச்செயல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதோடு, 85% ஆனோர் குற்றவியல் நீதிக் கட்டமைப்பு தொடர்பான சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அத்துடன் 90% ஆனோர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும், சட்ட அறிவின்மையே ஒரு முக்கிய காரணமாகக் காணப்பட்டுள்ளது.

காலத்தின் தேவையான இந்த பிரசாரத் திட்டம் தொடர்பில், கௌரவ நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கருத்து வெளியிடுகையில், “தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், மக்கள் சட்டத்தின் பாதுகாப்பை நம்பிக்கையோடு நாடும் வகையில் அவர்கள் கொண்டுள்ள சுய உரிமைகளைக் கற்றுக்கொள்ள உதவுவது எமது கடமையாகும். ‘Know Your Neethi’ என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, பங்கேற்புடனான, வெளிப்படையான நீதி கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்கின்ற எமது நோக்கத்தை மீள வலியுறுத்தும் ஒரு முயற்சியாகும்.” என்றார்.

இந்த முயற்சியானது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியளிக்கப்படுகின்ற நீதித் துறைக்கான அனுசரணை (Support to Justice Sector – JURE) திட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த திட்டம், UNDP மற்றும் UNICEF Sri Lanka ஆகிய அமைப்புகளினால் கூட்டாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நீதியமைச்சினால் வசதியளிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை முழுவதும் நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான JURE திட்டத்தின் விரிவான முயற்சிகள் மற்றும் அதனால் நிரூபிக்கப்பட்ட தாக்கத்தை இது வலுப்படுத்தும். இத்திட்டத்தின் ஊடாக, 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 40,000 இற்கும் மேற்பட்டோர் சட்ட உதவியை பெற்றுள்ளதோடு, சட்ட விழிப்புணர்வு அமர்வுகளிலும் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மேன்மை தங்கிய கார்மென் மொரேனோ (Carmen Moreno) கருத்து வெளியிடுகையில், “சட்டமானது பாதுகாப்பளிப்பது மட்டுமல்லாமல் தனிநபர்களை வலுவூட்ட வேண்டும்அந்த வலுவூட்டலானது அறிவிலிருந்து ஆரம்பிக்கின்றதுதகவலறிந்த பொதுமக்கள் பொதுக் கலந்துரையாடலில் பங்கேற்கவும், சட்ட சீர்திருத்தங்களுக்கு பங்களிக்கவும், அதிகாரத்தில் இருப்பவர்களை பொறுப்புக்கூற வைக்கவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும்வெளிப்படைத்தன்மை மற்றும் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்ட கலாசாரமானது நீதியை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக மாற்றுகிறது.”என்றார்.

உங்கள் சட்டங்களை நீங்கள் அறியுங்கள் பிரசாரத் திட்டமானது ஒரு உயிரோட்டமான சட்டக் கல்வி மையத்தை அடிப்படைமாகக் கொண்டதாகும். பார்வையாளர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலான சிறிய வீடியோக்கள், நிபுணர்களின் நேர்காணல்கள், விளக்கக் காணொளிகளை பார்வையிடலாம். YouTube, Facebook, Instagram உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் இந்த பிரசார நடவடிக்கைகள், சட்டத் தகவல்களை எளிமையாகவும், ஈர்க்கக்கூடிய முறையிலும், நடைமுறை ரீதியான பயனுடையதாக அமையும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு முழுமையான டிஜிட்டல் பிரசாரத்திற்கு அப்பால், சமூக அளவிலான செயற்பாடுகளும் இப்பிரசார திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ‘Know Your Neethi’ பிரசாரத்தின் முதலாவது இரண்டு நாட்களைக் கொண்ட சட்ட விழிப்புணர்வு முகாம், மிக விரைவில் பதுளையில் நடைபெறவுள்ளது. இதில், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு கல்வி, சட்ட உதவி ஆலோசனைகள், சட்டம் தொடர்பான கல்வி மற்றும் சட்ட நிறுவனங்களுடனான நேரடி கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் UNDP அமைப்பு வகிக்கும் பங்கு தொடர்பில் இலங்கைக்கான UNDP வதிவிட பிரதிநிதி அஸூசா குபோட்டா (Ms. Azusa Kubota) தெரிவிக்கையில், “இந்த பிரசாரமானது வெறுமனே தகவல்களை வழங்குவது மாத்திரமல்லாமல், மக்களை ஊக்குவிக்கும் ஒரு செயற்பாடாகும். ஒவ்வொருவரும் தாம் தமது உரிமைகளைதமது சட்டத்தை புரிந்துகொண்டுள்ளோம் என நம்பிக்கையோடு தெரிவிக்கக்கூடிய தனிநபரை உருவாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். UNDP இந்த திட்டம் சார் பங்காளர்களுடன் இணைந்து, சட்டத் துறை நிபுணர்களை ஒருங்கிணைத்து, மக்கள் தங்கள் உரிமைகளை புரிந்துகொள்ளச் செய்வதில் உற்சாகமாக செயற்பட்டு வருகின்றது. இதன் வாயிலாக, அவர்கள் நீதிமிக்க, ஈடுகொடுக்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கின்றோம்.” என்றார்.

Know Your Neethi’ பிரசாரம், சட்டம் என்பது ஒரு சொகுசான விடயம் அல்ல. இது ஒரு தடுப்பு நடைமுறை, பாதுகாப்புக்கான கருவி, நீதிக்கான ஒரு வழி என்பதை வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் தங்களது உரிமைகளை அறிந்து, பொறுப்புகளை புரிந்து, நீதியை நாடும் வழியைக் கற்றுக்கொள்வதே இப்பிரசாரத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, Instagram, Facebook, YouTube தளங்களில் @knowyourneethi எனும் பக்கத்தை பின்தொடருங்கள்.

JURE திட்டம் பற்றி: 

நீதித் துறைக்கான அனுசரணை (Support to Justice Sector Project – JURE) திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், UNDP மற்றும் UNICEF ஶ்ரீ லங்கா அமைப்புகளினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற, நீதியமைச்சின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். JURE திட்டம், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இது நவீன, செயல்திறனைக் கொண்ட, உள்ளீர்க்கப்பட்ட விடயங்களுடன் கூடிய நீதித் துறையை கட்டியெழுப்பும் மூன்று கட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) முக்கிய திட்டங்களின் கீழ் செயற்படும் JURE திட்டமானது, இலங்கையின் நீதித் துறைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் ஒரு முழுமையான திட்டமாகும். இது, முக்கிய நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் நெருக்கமான ஆலோசனைகள் மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் மூலம் செயற்படுத்தப்படுகிறது.

UNDP பற்றி: 

UNDP ஆனது வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் ஐக்கிய நாடுகளின் முன்னணி அமைப்பாகும். இது 170 நாடுகளில் நிபுணர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நீடித்த தீர்வுகளை ஏற்படுத்துகிறது.

மேலதிக தகவல்களுக்கு: www.undp.org/srilanka அல்லது சமூக ஊடகங்களில் பின்தொடர: @UNDPSriLanka

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025