Home » பாம் ஒயில் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

பாம் ஒயில் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

- தேசிய பொருளாதார மீட்புக்கான நடவடிக்கை

by CeylonBusiness1
September 26, 2025 2:19 pm/**/ 0 comment

இலங்கைக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) மீண்டும் ஃபாம் ஒயில் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம் தோட்டத் தொழில்துறையில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் கூற்றுப்படி, 2021 இல் அரசாங்கம் ஃபாம் ஒயில் செய்கைக்கு திடீரெனத் தடை விதித்ததைத் தொடர்ந்து, நாட்டின் மிகவும் மதிப்புமிக்க மூலோபாய பன்முகப்படுத்தல்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இலாபகரமான இந்த பயிர், கொள்கை முரண்பாடு மற்றும் இழந்த பொருளாதார வாய்ப்புகளின் அடையாளமாக மாறியுள்ளது.

இலங்கையில் முதன்முதலில் 1968 இல் ஃபாம் ஒயில் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ரப்பர் பயிரால் ஏற்பட்ட நஷ்டத்தால் அதற்கு மாற்று வழிகளைத் தேடியபோதுதான் இது அதிக வரவேற்பைப் பெற்றது. பயிரின் மகத்தான ஆற்றலை உணர்ந்த அப்போதைய அரசாங்கம் 2009இல் புதிய ஃபாம் ஒயில் செய்கையை நிறுவுவதற்கு வரிச் சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்ததுடன், 2016 க்குள் 20,000 ஹெக்டேயர் வரை விரிவாக்கத்தை முறையாக அங்கீகரித்தது.

banner

அப்போதைய அரசாங்கத்திடமிருந்து கிடைத்த உறுதியான நேர்மறையான சமிக்ஞைகளால், வட்டவளை, நமுனுகுல, எல்பிட்டிய, அகலவத்தை, ஹொரண, கேகாலை, மல்வத்தை வெலி மற்றும் கொட்டகலை போன்ற தோட்ட நிறுவனங்கள் நாற்றுப் பண்ணை, ஆலை வசதிகள் மற்றும் ஆராய்ச்சியில் பில்லியன்கணக்கான ரூபாய் முதலீடு செய்தன. இந்த விரிவாக்கங்கள் கடுமையான மற்றும் தரம்குறைந்த ரப்பர் தோட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இலங்கையில் குறிப்பிடத்தக்க ஆவணப்படுத்தப்பட்ட எதிர்மறை சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், ஏறத்தாழ 6 தசாப்தங்களாக ஃபாம் ஒயில் செய்கை இருந்தபோதிலும், அதன் விரிவாக்கம் பல்வேறு நலன்களின் தொடர்ச்சியான எதிர்ப்பை எதிர்கொண்டதாக சம்மேளனம் குறிப்பிட்டது. 2021 ஆம் ஆண்டின் தடை, நாற்றுப் பண்ணைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 550 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள நாற்றுகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கொள்கை மாற்றமானது, தோட்டத் துறை, ஆலைகள் மற்றும் எதிர்கால வருவாய் உட்பட சுமார் 23 பில்லியன் ரூபா மதிப்புள்ள முதலீடுகளை எந்தவிதமான இழப்பீடும் இல்லாமல் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

“குறிப்பாக, ஃபாம் ஒயில் இத்துறையில் மிகவும் இலாபகரமான பயிராக இருந்தது. இது சராசரியாக 49% நிகர இலாபத்தை ஈட்டியது, மேலும் சில சந்தர்ப்பங்களில் RPC இலாபத்தில் பாதிக்கும் மேல் பங்களித்தது. இந்த திடீர் தடை இலாபத்தன்மையைக் குறைத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைத்து, ஒரு காலத்தில் செழிப்பான தொழில்துறையின் ஒரு பகுதியை முடக்கியுள்ளது.” என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் லலித் ஒபேசேகர தெரிவித்தார்.

சமூக மற்றும் பொருளாதார விளைவுகள்
இந்தத் துறையில் 5,000க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளும், 21,000 சார்பு வாழ்வாதாரங்களும் இருந்தன, இதில் ஃபாம் ஒயில் தொழிலாளர்கள் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களை விட சுமார் இருமடங்கு ஊதியம் பெற்றனர். இந்தத் தொழில் தோட்டக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானத்தை அளித்தது, வறுமை ஆழமாக வேரூன்றிய பகுதிகளில் நிலையான வருமான ஆதாரத்தை வழங்கியது. நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், இத்துறையின் திடீர் நிறுத்தம் பல குடும்பங்களை நிதி பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவுகள் பல தொழில்துறைகளிலும் உணரப்படுகின்றன. உள்நாட்டில் கிடைக்கும் மசகு ஃபாம் ஒயில் விநியோகத்தை நம்பியிருந்த சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது தாமதம், அதிக செலவுகள் மற்றும் கடினமான உரிமங்கள் மூலம் இறக்குமதிகளை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பேக்கரி மற்றும் இனிப்புத் தொழில், பான், பிஸ்கட் மற்றும் மார்கரின் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. மருந்து, தனிநபர் பராமரிப்பு மற்றும் தொழில்துறை துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன, இது வணிகங்கள் மற்றும் நுகர்வோர் என இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு செலாவணி வீழ்ச்சி மற்றும் தவறான சுற்றுச்சூழல் கவலைகள்
வெளிநாட்டு செலாவணி நெருக்கடியையும் இந்தத் தடை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய் ஆண்டு நுகர்வு சுமார் 264,000 மெட்ரிக் தொன்கள் ஆகும். ஆனால், உள்ளூர் உற்பத்தி இந்தத் தேவையில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இந்த பற்றாக்குறை இறக்குமதிகள் மூலம் ஈடுசெய்யப்படுகிறது, இதனால் இருப்பு நிதியில் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மாறுவது, 2020 ஆம் ஆண்டில் 63 பில்லியன் ரூபாவை ஈட்டிய இலாபகரமான ஏற்றுமதித் தொழிலை பாதிக்கிறது. ஐந்து ஆண்டுகளில், இந்தத் தடை 175 மில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு செலாவணிக்கு செலவு ஏற்படுத்தும், இது பொருளாதார மீட்சியிலுள்ள ஒரு நாட்டிற்கு தாங்க முடியாத சுமையாகும்.

இக்கொள்கையை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் சுற்றுச்சூழல் கவலைகள், இலங்கையின் சூழலில் பெருமளவில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை. உலகளவில், ஃபாம் ஒயில் மிகவும் திறமையான எண்ணெய் பயிராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது 6% நிலத்தில் 40% தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் RSPO, ISPO சான்றிதழ்கள், சிறு விவசாயிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் Zero-Waste தொழில்நுட்பங்கள் போன்ற நிலைத்தன்மை தரங்களை அமுல்படுத்தி, செய்கையைத் தழுவியுள்ளன. இலங்கையில், ஃபாம் ஒயில் பயிரிடப்படுவது கன்னி காடுகளில் அல்ல, மாறாக ஏற்கனவே தங்கள் பொருளாதார சுழற்சியை நிறைவு செய்த பழைய ரப்பர் நிலங்களில்தான். சரியான ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்புடன், இலங்கை சுற்றுச்சூழலில் சமரசம் செய்யாமல் ஒரு நிலையான ஃபாம் ஓயில் துறையை உருவாக்க முடியும்.

ஃபாம் ஒயிலின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாத மற்றொரு பரிமாணமாகும். Naturally Trans-fat Free, விற்றமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த, உணவு உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஃபாம் ஒயில், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக உள்ளது. பொறுப்புடன் உற்பத்தி செய்யப்படும்போது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வனவிலங்கு நிதியத்தால் (WWF) அங்கீகரிக்கப்பட்ட இது, உணவுப் பாதுகாப்புக்கு நிரூபிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் திறமையான ஒரு தேர்வாகும்.

தவறவிடக்கூடாத ஒரு பொன்னான வாய்ப்பு
இலங்கை ஃபாம் ஒயில் துறையை மீட்க, தடையை நீக்கி, நிலைத்தன்மை தரநிலைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், சிறு விவசாயிகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், இறக்குமதி வரியை சீர்திருத்துவதன் மூலமும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டறிதல் அமைப்புகளில் முதலீடு செய்வதன் மூலமும் அதை புதுப்பிக்க முடியும். இந்தியா ஏற்கனவே இந்தத் திசையில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் ஃபாம் ஒயில் செய்கையை 45% விரிவாக்கியுள்ளது. 2030 க்குள் 1.7 மில்லியன் ஹெக்டேயர் பரப்பளவை அடைவதற்கான இலட்சிய திட்டங்களையும் கொண்டுள்ளது. சரியான வளரும் காலநிலையைக் கொண்ட இலங்கை, இந்த உதாரணத்தைப் பின்பற்றுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.
இலங்கையின் ஃபாம் ஒயில் தடை, தோட்ட நிறுவனங்கள், கிராமப்புற குடும்பங்கள், தொழில்துறைகள் மற்றும் தேசியப் பொருளாதாரம் ஆகியவற்றிற்குத் தவிர்க்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புத்துயிர் பெறுவதற்கான சாத்தியம் இன்னும் உள்ளது. உலகளாவிய சிறந்த நடைமுறைகள் எளிதில் கிடைப்பதால், விவசாயப் பல்வகைப்படுத்தல், உணவுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு செலாவணி வருமானத்திற்கான ஒரு தளமாக ஃபாம் ஒயிலைப் பயன்படுத்தலாம். தோட்டத் தொழில்துறையின் மறுமலர்ச்சிக்கான ஒரு முக்கிய உத்தியாக, ஃபாம் ஒயிலை ஏற்றுக்கொள்வதற்கும், அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்த முக்கியமான தருணத்தில், இலங்கை இத்தகைய பொன்னான வாய்ப்பை புறக்கணிக்க முடியாது.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025