Home » இலங்கையின் தொழில்நுட்பத் துறைக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ள SLIIT Codefest 2025 நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் தொழில்நுட்பத் துறைக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ள SLIIT Codefest 2025 நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு

by CeylonBusiness1
October 9, 2025 12:23 pm/**/ 0 comment

“டிஜிட்டல் பரிணாமம்: சிந்தனைகள் புத்தாக்கத்துடன் சங்கமிக்கும் களம்” (Digital Evolution: Where Ideas Meet Innovation) என்ற தொனிப்பொருளின் கீழ் தனது பிரதான தேசிய மற்றும் சர்வதேச தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் போட்டியை தொடர்ந்தும் 14வது தடவையாக, 2025 செப்டெம்பர் 4 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் Faculty of Computing at SLIIT வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த கல்வி நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டியதாக ஏற்பாடு செய்யப்பட்ட Codefest 2025 ஆனது, தேசத்திலுள்ள திறமைமிக்க இளம் புத்தாக்குனர்களை ஒன்றுதிரட்டியுள்ளது. 250+ பாடசாலைகளிலிருந்து 500+ பாடசாலை மாணவர்களும், 60 சர்வதேச போட்டியாளர்கள் அடங்கலாக, 30+ பல்கலைக்கழகங்களிலிருந்து 2,000 பல்கலைக்கழக மாணவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர். இதற்குப் புறம்பாக, செயலமர்வுகள் மற்றும் தகவல் பரப்பல் நிகழ்வுகள் மூலமாக, இலங்கை எங்கிலும் 6,000 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு Codefest பயனளித்துள்ளதுடன், எதிர்காலத்திற்கு முகங்கொடுப்பதற்கு தயாரான திறமைசாலிகளை வளர்க்கும் மேடை என்ற தனது வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இம்முறை தனது அடைவுமட்டத்தை இலங்கைக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்ற ஒரு நிகழ்வு என்ற தனது நன்மதிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், DevQuest போட்டிக்காக, 300+ வெளிநாட்டு மாணவர்களை Codefest 2025 ஈர்த்துள்ளது. தேசிய அளவில் நற்பலன் மற்றும் சர்வதேச ஈடுபாடு ஆகியவற்றுடன், புத்தாக்கம் மற்றும் அறிவுப்பகிர்வு ஆகியவற்றுக்கான மையமாக Codefest தொடர்ந்தும் SLIIT ஐ நிலைநிறுத்தியுள்ளதுடன், தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை தலைவர்களையும் வளர்த்து வருகின்றது.

banner

இப்போட்டிகள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக (மூன்றாம் நிலைக் கல்வி) மட்டங்களில் இடம்பெற்றதுடன், பாடசாலை மட்ட போட்டியாளர்கள், ஆரம்ப, கனிஷ்ட, மற்றும் சிரேஷ்ட Coding போட்டிகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வினா-விடை, மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போட்டி ஆகியவற்றில் போட்டியிட்ட அதேசமயம், மூன்றாம் நிலைக் கல்வி மட்ட போட்டியாளர்கள் Algothon, Capture the Flag, Datathon, Designthon, Netcom, Cisco Technopreneur, InnovIoT, ReviveNation, மற்றும் DevQuest போன்ற போட்டி நிகழ்வுகளில் பங்கேற்றனர். நிஜ உலகின் சவால்களைக் கையாள்வதில் சர்வதேச அணிகளை DevQuest ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டிகள் 2025 ஆகஸ்ட் 25 முதல் செப்டெம்பர் 4 வரை மாலபே SLIIT பல்கலைக்கழகத்தின் பிரதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்றதுடன், தொடர் போட்டிகள், கண்காட்சிகள், பிரதான உரை அமர்வுகள், மற்றும் தொழில்துறையில் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் அதில் அடங்கியிருந்தன.

99X Technology பிரதம செயல்பாட்டு அதிகாரியும், SLASSCOM தலைவருமான ஷெஹானி செனவிரத்ன அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன், இலங்கை, மாலைதீவு, நேபாளம், மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான Cisco Systems ன் கூட்டாளர் கட்டமைப்பின் தலைவர் திரு. சஞ்சீவ சப்புமல் அவர்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார்.

Computing ன் பிரதி துணைவேந்தர் பேராசிரியர் நுவான் கோட்டகொட அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில்: “Faculty of Computing at SLIIT ன் சிந்தனையில் உதித்த Codefest 2025 ஆனது இலங்கையின் முன்னணி தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் போட்டி என்ற வகையில் தொடர்ந்து தனது 14வது ஆண்டை எட்டியுள்ளது. நன்கு கட்டமைக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதான நிகழ்வுகள், மற்றும் பாடசாலை மட்டத்திலான பல்வேறுபட்ட போட்டிகளுடன், வியப்பூட்டும் புதிய, மூன்றாம் நிலைக் கல்வி மட்டத்திலான சவால் போட்டிகளும் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றுதிரட்டியுள்ள Codefest, புத்தாக்கம், ஒத்துழைப்பு, மற்றும் டிஜிட்டல் மகத்துவம் ஆகியவற்றை வளர்ப்பதற்கான துடிப்பான மேடையாக தொடர்ந்தும் திகழ்ந்து வருகின்றது. கல்வி அமைச்சு, மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு, தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகியவற்றின் உண்மையான தேசிய கொண்டாட்டமாக வளர்ச்சி கண்டுள்ளது.”

பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்த்தன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “அதிகரித்துச் செல்லும் சர்வதேச மட்டத்திலான பங்கேற்புடன், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மத்தியில் 14 போட்டிகளைக் கொண்டதாக இந்த ஆண்டில் Codefest 2025 போட்டி ஈட்டியுள்ள வெற்றியைக் காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிகழ்வானது இளம் சிந்தனைகளை தொடர்ந்தும் தூண்டி, புத்தாக்கத்திற்கு உத்வேகமளித்து, மற்றும் எமது மாணவர்களின் மிகச் சிறந்த திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), புள்ளி விபர அறிவியல் (Data Science), வலையமைப்புக்கள் (Network), மற்றும் மென்பொருள் பொறியியல் (Software Engineering) போன்ற முக்கியமான துறைகளை உள்ளடக்கியவாறு, கல்விச் சமூகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தளமாக Codefest மாறியுள்ளது. கணினித் துறை தலைவர்களின் அடுத்த தலைமுறையை இது தொடர்ந்தும் வளர்க்கும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.”

இறுதிப் போட்டியில் பின்வரும் அணிகள் வெற்றியாளர்களாக மாறின. மூன்றாம் நிலைக் கல்விப் பிரிவின் கீழ், Algothon போட்டியின் வெற்றியாளர்களாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் The Byte Force அணியும், Capture The Flag போட்டியின் வெற்றியாளர்களாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் !403_privileged அணியும் வெற்றி பெற்றுள்ளன. Datathon போட்டியில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் Data Guild அணியும், Designathon போட்டியில் கொழும்பு பல்கலைக்கழக கணினி கற்கைபீடத்தின் Bitrithm அணியும் வெற்றியீட்டின. DevQuest பிரிவுக்கான வெற்றியை Taylor’s பல்கலைக்கழகத்தின் Kwek Kwek அணி பெற்றுள்ளதுடன், InnovIot போட்டியில் களனி பல்கலைக்கழகத்தின் Hydrotech அணி வெற்றியீட்டியது. Netcom சவால் போட்டியை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் Traceroute வென்றதுடன், ReviveNation போட்டியை SLIIT பல்கலைக்கழகத்தின் QBITS அணி வென்றுள்ளது. Informatics Institute of Technology கல்வி நிறுவனத்தின் VisuaLit அணி, முறையே CISCO Technopreneur சவால் போட்டி மற்றும் Investor’s Choice விருது ஆகியவற்றை வென்றுள்ளது. SLIIT பல்கலைக்கழகத்தின் Miniblocks அணி, Impact Innovator விருதை வென்றுள்ளது.

பாடசாலை மட்ட பிரிவில், பாடசாலை செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் பதுளை, பண்டாரவளை மத்திய கல்லூரியும், பாடசாலை கனிஷ்ட பிரிவில் மாத்தறை பரி தோமையர் கல்லூரியும் வென்றுள்ளன. பாடசாலை மட்ட ஆரம்ப பிரிவுக்கான விருதை இராஜகிரிய Gen AI ன் Buddy Book வென்றுள்ளதுடன், பாடசாலை மட்ட சிரேஷ்ட பிரிவில் பதுளை மத்திய கல்லூரியின் OryGen அணி வெற்றி பெற்றுள்ளது. இதை விட, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வினா-விடைப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பதுளை மத்திய கல்லூரி வெற்றியைத் தனதாக்கியுள்ளது.

மிகச் சிறந்த புத்தாக்கம், படைப்பாற்றல், மற்றும் தொழில்நுட்ப மகத்துவம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகள் மத்தியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரூபா இரண்டு மில்லியன் தொகைக்கும் மேற்பட்ட பணப் பரிசுகள், வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Codefest போட்டியின் தலைவரும், இணைப்பாளருமான பேராசிரியர் அனுருத்த ஜெயக்கொடி அவர்கள் இந்நிகழ்வைப் பிரதிபலித்து கருத்து வெளியிடுகையில்: “14வது முறையாக இடம்பெற்ற Codefest போட்டிக்கு மாணவர்களை வரவேற்றுள்ளமை எமக்கு மிகவும் பெருமையளிக்கின்றது. படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன்கள், மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை வெளிக்காண்பிப்பதற்கான துடிப்பான களமாக இம்மேடை கடந்த காலங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, மற்றும் எமது தொழில்முறை கூட்டாளர்கள் ஆகிய தரப்பினரின் ஒத்தாசையுடன், தொழில்நுட்பத்துறையின் எதிர்காலத் தலைவர்களுக்கு உத்வேகமளித்து, டிஜிட்டல் பரிணாம மாற்றத்தை முன்னெடுத்து, கடந்த காலங்களை விடவும் கூடுதலான நற்பயனை Codefest 2025 தோற்றுவித்துள்ளது.”

தொழில்நுட்பத்தில் பிரதிநிதித்துவம் குறைந்த பிரிவுகளும் பங்கேற்பதை உறுதி செய்தவாறு, நிலைபேற்றியல், பன்மைத்துவம், சமத்துவம், மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றையும் Codefest 2025 வலியுறுத்தியுள்ளது. போட்டி என்பதற்கும் அப்பால், அத்தகைய முயற்சிகளின் சமூக முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. மாணவர்கள் மத்தியில் டிஜிட்டல் அறிவு, விமர்சன ரீதியான சிந்தனை, மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை வளர்த்து, இலங்கையின் கல்வி முறைமையை வலுப்படுத்தி, உலகளாவிய அறிவுப் பொருளாதாரத்திற்கு அடுத்த தலைமுறையை தயார்படுத்துவதற்கு இந்நிகழ்வு நேரடியாகப் பங்களிக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, Codefest நிகழ்வின் ஒத்துழைக்கும் உணர்வு சமூக ஈடுபாட்டை வளர்த்து, சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கருவியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு இளம் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமளித்து, அதன் மூலமாக கல்வி மற்றும் இலங்கைச் சமுதாயத்தின் பரந்த அபிவிருத்தி ஆகியவற்றை முன்னேற்றுகின்றது.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025