Home Travel & TourismTikTok ஊடாக உலகை வியக்க வைக்கும் இலங்கையின் இயற்கை எழிலும், விருந்தோம்பலும்

TikTok ஊடாக உலகை வியக்க வைக்கும் இலங்கையின் இயற்கை எழிலும், விருந்தோம்பலும்

by CeylonBusiness1
October 26, 2026 11:10 am/**/ 0 comment

நாம் கடந்து செல்லும் ஒரு கடற்கரை, சிறுவயது முதல் நாம் சுவைத்த ஓர் உணவு, மலைகளைக் கடந்து செல்லும் புகையிரதம் என அன்றாட வாழ்வின் பழக்கப்பட்ட இடங்களை நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், முதன்முதலாகப் பார்க்கும் ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு, இந்த எளிய காட்சிகள் கூட ஓர் அரிய அனுபவமாகத் தோன்றுகின்றன.

TikTok தளத்தில், #TravelSriLanka எனும் ஹேஷ்டேக் மூலம் 1,72,000க்கும் அதிகமான பதிவுகள் வாயிலாக இத்தகைய கணங்கள் உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகின்றன. பயணிகள் நமது உணவுகளைச் சுவைக்கிறார்கள், ஆழ்கடலில் நீந்துகிறார்கள், வனவிலங்குகளைத் தேடி அலைகிறார்கள், தொன்மைமிக்க நகரங்களை ரசிக்கிறார்கள், அத்துடன் நமது மக்களின் அன்பான உபசரிப்பில் மெய்மறக்கிறார்கள். அவர்களின் இந்த வியப்பு, நமது சொந்த நாட்டை நாம் மீண்டும் ஒருமுறை புதிய கோணத்தில் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

“சுற்றுலாவை மறுவடிவமைக்க டிஜிட்டல் நிகழ்ச்சி நிரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு” எனும் கருப்பொருளில் கொண்டாடப்படும் 2026 உலக சுற்றுலா தினத்தில், தொழில்நுட்பம் எவ்வாறு நமது நாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது என்பதை நாம் கொண்டாடுகிறோம்.

நமது புகழ்பெற்ற கொத்து, யாழ்ப்பாண உணவுகள் மற்றும் பாரம்பரிய சோறு கறியை வெளிநாட்டுப் பயணிகள் முதன்முறையாகச் சுவைத்துப் பார்த்து வெளியிடும் வீடியோக்கள், நமது உணவுப் கலாச்சாரத்தை வெளியாரின் பார்வையிலிருந்து நாம் ரசிக்க உதவுகின்றன. சில நேரங்களில், பயணிகள் பகிரும் குடும்ப உணவகங்கள் மற்றும் உள்ளூர் சமையல் அனுபவங்கள், நாம் இதுவரை அறியாத புதிய இடங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

banner

அதேபோல், இலங்கையின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. எளிய விடுதிகள், தேயிலைத் தோட்டப் பங்களாக்கள் முதல் இயற்கை எழில் கொஞ்சும் தங்கும் விடுதிகள் வரை பயணிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அறுகம்பே அலைச்சறுக்கு, ஆழ்கடல் நீச்சல், திமிங்கலங்களைப் பார்வையிடுதல் மற்றும் யால, உடவலவ சரணாலயங்களின் வனவிலங்குச் சவாரிகள் என இலங்கையின் இயற்கை வளங்கள் உலகப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன.

வரலாறும் கலாச்சாரமும் இயற்கையோடு இணைந்து வாழும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சீகிரியா கோட்டை, கண்டி மாநகரின் பாரம்பரியம், காலி கோட்டையின் மதில்கள் மற்றும் மூடுபனி சூழ்ந்த தேயிலைத் தோட்டங்கள் போன்றவை வெறும் வரலாற்றுச் சின்னங்களாக மட்டுமன்றி, ஒரு பழமையான அதேவேளை துடிப்பான நாட்டின் கதையை உலகுக்குக் கூறுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, திட்டமிடப்படாத மனித சந்திப்புகளே பயணிகளின் மனதில் நீங்காத இடம் பிடிக்கின்றன. ஒரு கிராமத்துப் பாட்டியிடம் சமையல் கற்றுக்கொள்வது, உள்ளூர் குடும்பத்துடன் உணவு உண்பது மற்றும் பாரம்பரியக் கைவினைப் பொருட்களைப் பார்வையிடுவது என இலங்கை மக்களின் அன்பான உபசரிப்பு உலகப் பயணிகளின் இதயங்களை வென்றுள்ளது.

TikTok இந்த அனுபவங்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்குக் கொண்டு சேர்த்தாலும், அவர்கள் கண்டு வியக்கும் இலங்கை என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். நாம் தினமும் கடந்து செல்லும் சூழலையும், சுவைக்கும் உணவுகளையும், நமது கலாச்சாரத்தையும் மற்றவர்களின் கண்கள் வழியே பார்க்கும்போது, நாம் சாதாரணமாகக் கருதிய விடயங்களின் உண்மையான மதிப்பு நமக்குத் புரிகிறது.

இந்த உலக சுற்றுலா தினத்தில், நமது நாடு உலகளவில் பல வழிகளில் கண்டறியப்பட்டு, அனுபவிக்கப்பட்டு, பகிரப்படுவதைக் கொண்டாடுவோம். ஒவ்வொரு பயணியும் இலங்கையைப் பற்றிய தங்களின் சொந்த நினைவுகளோடு விடைபெற்றாலும், அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்ற ஒரே இடம் நமது இலங்கை மட்டுமே. பகிர வேண்டியதும், மீண்டும் கண்டறிய வேண்டியதும், நாம் பெருமைப்பட வேண்டியதும் நமது தாய்நாடே.

You may also like

Leave a Comment