Home » சீரோ சான்ஸ் போட்டியின் பரிசளிப்பு விழாவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான மாணவர் படைப்பாற்றல்கள் கௌரவிப்பு

சீரோ சான்ஸ் போட்டியின் பரிசளிப்பு விழாவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான மாணவர் படைப்பாற்றல்கள் கௌரவிப்பு

by CeylonBusiness1
November 20, 2025 3:00 pm/**/ 0 comment

கடந்த 2025 நவம்பர் 15ஆம் திகதி, கொழும்பு BMICH இல் இடம்பெற்ற சீரோ சான்ஸ் சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழாவில் (Zero Chance Art and Essay Awards Ceremony), தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக, இலங்கை மாணவர்களின் படைப்பாற்றல்கள் கௌரவிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத குடியேற்ற பயண அபாயங்கள் தொடர்பில், மாணவர்கள் தங்கள் சித்திரம் மற்றும் எழுத்தாற்றல்களைப் பயன்படுத்தி எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பதை இந்நிகழ்வு வெளிக்காட்டியது.

2025 மே 19 முதல் ஜூலை 17 வரை இடம்பெற்ற இந்த போட்டியில், 20 மாவட்டங்களைச் சேர்ந்த 42 பாடசாலைகளில் இருந்து சித்திர பிரிவில் 1,170 மற்றும் கட்டுரை பிரிவில் 1,762 என, சாதனை எண்ணிக்கையிலான 2,932 படைப்புகள் கிடைக்கப் பெற்றன. மொத்தமாக 199 மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர். அத்துடன், 60 மாணவர்கள் நான்காம், ஐந்தாம் இடங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கு இடையிலான கூட்டு முயற்சியான இந்தப் படைப்பாற்றல் போட்டியானது, பின்வரும் எண்ணக்கருவின் கீழ் அவுஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத கடல்சார் குடியேற்றத்துடன் தொடர்புடைய அபாயங்கள் தொடர்பில்  மாணவர்கள் தங்கள் புரிதலை வெளிப்படுத்த ஊக்குவித்தது: 

“படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயற்சிப்பது ஒரு முட்டாள்தனமான செயலாகும்.”

banner

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், மேன்மை தங்கிய மெத்தியூ டக்வேர்த் (Matthew Duckworth) கருத்துத் தெரிவிக்கையில்: “அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும், பிராந்தியத்தில் ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடவும், மிக முக்கியமாக, மக்கள் கடலில் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட, இராணுவ தலைமையிலான எல்லைப் பாதுகாப்பிற்கான ஒரு செயற்பாடாக, ‘இறையாண்மை எல்லை நடவடிக்கை’ (Operation Sovereign Borders) 13 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது.” என குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதன் பின்னர், அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ஒவ்வொரு இலங்கை ஆட்கடத்தல் படகும் தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது, சீரோ சான்ஸ் (Zero Chance) மூலோபாயத் தகவல் தொடர்பாடல் பிரசாரமாகும். இது ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வதில் இருந்து மக்களைத் தடுக்கவும், அவர்களுக்கு அறிவிக்கவும், விழிப்புணர்வு புகட்டவுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

மாணவர்கள் மூலமான தாக்கம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “மாணவர்கள், எழுத்தாளர்களாக மற்றும் கலைஞர்களாக, பரந்தபட்ட நபர்களிடையே ஒரு விடயத்தை சொல்ல உதவியுள்ளீர்கள். இலங்கையர்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் உயிர்களையும் பணயம் வைப்பதைத் தடுத்துள்ளீர்கள்” என்றார்.

சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நடுவர்களால், தரம் 9–11 மற்றும் தரம் 12–13 ஆகிய இரண்டு வயது பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்பட்டன.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதியும் கல்விப் பணிப்பாளருமான வருண கலுவெவ இங்கு தெரிவிக்கையில்,.”சீரோ சான்ஸ் போட்டியின் வெற்றியைக் கொண்டாட இங்கு அழைக்கப்பட்டிருப்பதை ஒரு பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெறுவதைத் தாண்டியதாக இருக்க வேண்டுமென்பதில், எமது அமைச்சின் கவனம் அமைகிறது. விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அக்கறை கொள்ளும் வகையிலும், அனைத்து வழிகளிலும் இளையவர்கள் சிறந்து வளர வேண்டும் என நாம் விரும்புகிறோம்.” என்றார்.

இந்த திட்டத்தின் மூலமான தாக்கம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இன்று நாம் கொண்டாடும் கருத்தாழம் கொண்ட கட்டுரைகள் மற்றும் உறுதியான கதைகளை சொல்லும் ஓவியங்கள், எமது எதிர்காலத் தலைவர்களின் குரல்கள் ஆகும். கடினமான பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும், எளிய அறிவை உண்மையான செயலாக மாற்றுவதற்கும் கலையும் இலக்கியமும் சக்திவாய்ந்த கருவிகள் என்பதை அவை நிரூபிக்கின்றன. வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற ஒவ்வொரு திறமையான மாணவருக்கும், எமது நல்வாழ்த்துகள். உங்கள் சாதனை வெறுமனே ஒரு வெற்றி மாத்திரம் அல்ல; அது துணிச்சலுடன் பேசுவதைப் பற்றியது. இந்த விடயங்கள் குறித்து ஆராய, உங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ஏற்கனவே மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளீர்கள்.” என்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்ட சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. அவர்களின் படைப்பாற்றலையும் தொழில்நுட்ப திறன்களையும் மேலும் வளர்க்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகளுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சீரோ சான்ஸ் பிரசாரத்தின் ஒரு முக்கிய அங்கமான, சித்திரம் மற்றும் கட்டுரை போட்டித் திட்டமானது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்துகிறது. இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இளைஞர்கள் மத்தியில், அவுஸ்திரேலியாவிற்கான சட்டவிரோதக் குடியேற்றத்தின் அபாயங்கள் தொடர்பான முக்கியமான விடயங்களை பேசுவதற்கு காணரமாக அமைகிறது.

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு: 

www.australia.gov.au/zerochance

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025