Home Financeஅமானா வங்கி இலங்கையின் சிறந்த வங்கியாக IFN விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றது

அமானா வங்கி இலங்கையின் சிறந்த வங்கியாக IFN விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றது

by CeylonBusiness1
October 30, 2026 11:24 am/**/ 0 comment

இலங்கையின் வட்டிசாரா இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மதிப்புமிக்க ‘இஸ்லாமிய ஃபைனான்ஸ் நியூஸ்‘ (IFN) விருது விழாவில் அமானா வங்கி மூன்று பிரதான விருதுகளைச் சுவீகரித்துள்ளது. இதில் தொடர்ந்தும் ஐந்தாவது ஆண்டாகவும் ‘இலங்கையின் மிகச்சிறந்த வங்கி‘ என்ற பெருமைமிக்க விருதும் அடங்கும். இச்சாதனைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், ‘இலங்கையின் மிகச்சிறந்த சில்லறை வங்கி‘ மற்றும் ‘இலங்கையின் மிகப் புத்தாக்கமான வங்கி‘ ஆகிய விருதுகளையும் வங்கி தனதாக்கிக் கொண்டுள்ளதுடன், வங்கிச் சேவையின் முக்கிய துறைகளில் தனது செயல்திறனின் பரந்த தன்மையை இதன் மூலம் மேலும் வெளிப்படுத்தியுள்ளது. தற்பொழுது 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்கி வரும் சூழலில், இலங்கையின் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறையில் அதிகரித்து வரும் கடுமையான போட்டிக்கு மத்தியிலே இச்சாதனைகள் எட்டப்பட்டுள்ளன.

மலேசியாவைத் தளமாகக் கொண்ட REDMoney Group இனால் ஏற்பாடு செய்யப்படும் IFN விருதுகள், தற்போது அதன் 20 ஆவது ஆண்டை எட்டியுள்ளதுடன், உலகளாவிய இஸ்லாமிய நிதித் துறையின் முன்னணி நிறுவனங்களையும் மைல்கல் பரிவர்த்தனைகளையும் அங்கீகரித்து வருகின்றது. டுபாயில் நடைபெற்ற பிரமாண்டமான விருது வழங்கும் விழாவில், அமானா வங்கியின் சார்பில் இவ்விருதுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வங்கியின் முகாமைத்துவ இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கலந்துகொண்டார்.

மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கட்டார், குவைத், ஓமான், எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி, ஐக்கிய இராச்சியம், இந்தோனேசியா மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட முக்கிய இஸ்லாமிய நிதித் துறைச் சந்தைகளை இவ்விருதுகள் உள்ளடக்கியிருந்தது. முன்னணி வங்கிகளை அங்கீகரிப்பதற்கு அப்பால், ‘சுகுக்‘ (Sukuks – இஸ்லாமியப் பத்திரம்), நிலையான நிதியளிப்பு, கூட்டமைப்பு நிதியளிப்பு, எல்லை கடந்த நிதியளிப்பு மற்றும் சமூகத் தாக்க நிதியளிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் சிறந்த இஸ்லாமிய நிதித் திட்டங்களையும் IFN விருதுகள் கௌரவிக்கின்றது. இவ்வாண்டின் விருது வழங்கும் விழாவில், முன்னோடி சுகுக் வெளியீட்டு முயற்சிகளுக்காக இறையாண்மை சார்ந்த அமைப்புகளுக்கும், ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்‘ மற்றும் HSBC போன்ற முன்னணி நிதி நிறுவனங்களுக்கும், S&P Global Ratings மற்றும் Moody’s உள்ளிட்ட சர்வதேச மதிப்பீட்டு முகவர் நிலையங்களுக்கும், அத்துடன் Al Rajhi Bank, Kuwait Finance House, Dubai Islamic Bank மற்றும் Abu Dhabi Islamic Bank போன்ற புகழ்பெற்ற இஸ்லாமிய வங்கி நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த கௌரவிப்பு தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “IFN விருது விழாவில் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாக மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். குறிப்பாக, உலகளாவிய இஸ்லாமிய வங்கித்துறை அமைப்பில் உலகப் புகழ்பெற்ற மற்றும் கீர்த்திநாமமிக்க நிறுவனங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் ஐந்தாவது ஆண்டாகவும் இந்த அங்கீகாரத்தைப் பெறுவதையிட்டு நாங்கள் பெருமையடைகின்றோம். உலகளாவிய தொழில்துறை கருத்துக்கணிப்பு மூலம் இந்த வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவது இவ்விருதுகளுக்கு மேலும் மதிப்புக் சேர்க்கின்றது. ஏனெனில், இது பரந்த இஸ்லாமிய வங்கித்துறைச் சமூகத்தின் மத்தியில் அமானா வங்கி வென்றெடுத்துள்ள நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் பிரதிபலிக்கின்றது. எமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய பங்காளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையும், எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பும் இல்லாவிட்டால் இந்தச் சாதனைகள் சாத்தியமாகியிருக்காது. எமது பயணத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து, அபிவிருத்தியை மையமாகக் கொண்ட மக்களுக்கு நட்பான வங்கி மாதிரியின் தரத்தை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கு எமக்கு ஊக்கமளித்தமைக்காக அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.

banner

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 

வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கி, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

You may also like

Leave a Comment